“என் மகளுக்கு நான் சொல்ல நினைத்த கதைகளில் இந்த உலகம் போர்களற்ற பேரமைதி கொண்டது என்ற பொய்யை மட்டுமே முன்னிறுத்தமுடிகிறது”: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கவிஞர் இரா. அருணாச்சலத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா
எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரியான கவிஞர் இரா. அருணாச்சலம் எழுதிய தன்னுடைய மூன்றாவது கவிதை நூலின் ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ வெளியீட்டு விழா, டிசம்பர் 11, 2025 அன்று காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் நிறுவாக இயக்குநர் திருமதி மணிமங்கை சத்தியநாராயணன் அவர்கள் விழாவில் தலைமை ஏற்று நூலை வெளியிட, நூலாசிரியரின் தாயார் திருமதி சுகன்யா இராஜேந்திரன் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொண்டார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் திரு. லிங்குசாமி அவர்கள் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் நூல் குறித்துத் திறனாய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்ப்பேராயத்தின் தலைவரான கரு. நாகராசன், “மிகச் சிறந்த கவிதை நூலுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் இந்த கவிதை தொகுப்பில் உள்ளது. கவிஞர் அருணாசலத்தின் அன்பு யதார்த்தமாக இருப்பதால் அவரது சிந்தனையும் பேச்சும் தெளிவுடன் இருக்கிறது.
எதை எப்படி சொல்கிறோம் என்பதில் தான் ஒரு கவிஞரின் திறமை உள்ளது. காவிய காதல்களை தோற்கடிக்கும் வகையில் உருக்கமாக தனது பருவ காதலை கூறியிருக்கின்றார், அத்துடன் சமூக இன்னல்களையும் இந்த கவிதை தொகுப்பில் தெரிவித்துள்ளார்,” என்றார்.
எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் நிறுவாக இயக்குநர் திருமதி மணிமங்கை சத்தியநாராயணன் அவர்கள் “ஒரு கவிதை எழுதுவதற்கு கவிஞர் தன் மனதில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பார்கள்; ஆனால் கவிஞர் அருணாச்சலம் தன்னுடைய ஆழ்மனதில் இருந்தே வார்த்தைகளை தொகுத்திருக்கிறார். இந்த இளம்வயதில் மூன்றாவது கவிதை தொகுப்பு வெளியிட்டிருப்பது, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். இன்னும் நிறைய நூல்களை கவிஞர் வெளியிட வேண்டும்,” என்றார்.
கவிஞர் மற்றும் திரைப்படங்களின் வசனகர்த்தாவான பிருந்தா சாரதி, “பாரதி கண்ட கனவு நிறைவேறியது அதனால் தான் இன்று இத்தனை பெண்கள் படிக்கிறார்கள். கவிதைகள் மூலம் எனக்கு நண்பனாக அறிமுகம் ஆனார் கவிஞர் அருணாச்சலம். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வேந்தரான டாக்டர் பாரிவேந்தரும் தேசிய விடுதலை மற்றும் பெண் விடுதலைப்பற்றி கவிதை தொகுப்பு எழுதி வெளியிட்டுள்ளார்.
‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ கவிதை தொகுப்பில் காதல் கவிதைகளை விட சமுதாயத்தை பற்றி வருந்தி எழுதிய கவிதைகளே அதிகம். உலக போர்பற்றியும் சமூக விழிப்புணர்வு சார்ந்தும் கவிதை எழுதியுள்ளார்,” என்றார்.
தமிழ்திசை இணையாசிரியை மற்றும் எழுத்தாளரான பிருந்தா ஸ்ரீனிவாசன், “வேதியியல் மாணவி பொறியியல் மாணவர் எழுதிய நூலை தமிழ் சான்றோர்கள் நிறைந்த மேடையில் திறனாய்வு செய்வதே புதிது.
அருணாச்சலம் அவர்களின் கவிதையில் இரண்டு விஷயங்கள் தெரிகிறது; ஒன்று காதல் கவிதை, மற்றோன்று சமூக பார்வை.
காதல் என்ற பெயரில் வன்முறையை கையாளும் திரைப்படங்கள், மற்றும் சமூகம் மத்தியில் பொறுமையுடன் தனது காதலை கவிதை தொகுப்பில் கூறியிருக்கிறார்,” என மிருகங்கள் மேல் உண்டாகும் கரிசனையையும், சமூகத்தில் பெண்களின் பங்களிப்பையும் வலிகளையும் கவிதைகளில் குறிப்பிட்டிருப்பதை தெரிவித்தார்.
ஆனந்தம், பீமா, அஞ்சான் போன்ற திரைப்படங்களை இயக்கிய, லிங்கு என்கிற ஹைக்கூ கவிதை தொகுப்புகளை வெளியிட்ட கவிஞர் மற்றும் இயக்குநரான லிங்குசாமி “அருணாச்சலம் ஒரு மிக அற்புதமான மனிதர்; இந்த உலகத்தில் நீங்கள் தனித்து தெரியவேண்டும் என்றால் கல்வி கற்க வேண்டும். அது உங்களுக்கு வேறு ஒரு பார்வையை கொடுக்கும். எஸ்.ஆர்.எம். ஒரு மிக அற்புதமான கல்லூரி வளாகம், இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்,” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து கவிஞர் அருணாச்சலம், “எல்லோரும் பாராட்டிய ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ என்ற கவிதையின் தலைப்பையே தொகுப்பின் பெயராக வைக்குமாறு கவிஞர் பழனிபாரதி கூறியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிர்பெற்ற மற்றும் உணர்ச்சியுள்ள எழுத்துக்கள் படைக்கவேண்டும் என்றால் சமூக பார்வை வேண்டும்; உலகத்தில் நிகழும் குறிப்பாக குழந்தைகள் மேல் செலுத்தும் வன்முறையை எதிர்த்தும் கவிதைகள் எழுதியுள்ளேன்.
பலருக்கு பல பொழுதுபோக்குகள் உண்டு, ஆனால் என் பணிசூழல் மற்றும் வாழ்வியல் சூழலை பொறுத்தவரை, எனக்கான ஒரு வடிகாலாக, என்னை நான் மறுபரிசீலனை செய்ய நான் பயன்படுத்துவது கவிதைகளைத் தான்,” என்று கூறினார்.
