கல்லூரி மாணவிகளுக்கு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி !
சென்னை : மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு வீதி நாடக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியன் சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் ஹெச்.எஸ்.எப் இணைந்து மனிதக் கடத்தல் தடுப்பு மன்றம் சார்பில் மனிதக் கடத்தலை தடுத்து நிறுத்துவோம் என்ற தலைப்பிலான பல்வேறு கல்லூரி மாணவியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு வீதி நாடகப் பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் அரங்கில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 67 கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களை சார்ந்த மாணவியர்கள், பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.
ஐ.சி.டபிள்யூ.ஓ அமைப்பின் செயலாளர் ஏ.ஜே ஹரிஹரன் வழிகாட்டுதலில் வீதி நாடக பயிற்றுனர்கள் சாந்தகுமார், அபர்ணா கோபிநாத் ஆகியோர் மாணவியர்களுக்கு வீதி நாடகப் பயிற்சியை வழங்கினர்.
பயிற்சி நிறைவு விழாவில் முகாமில் பங்கு பெற்ற மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாம் குறித்து ஐ.சி.டபிள்யூ.ஓ அமைப்பின் செயலாளர் ஏ.ஜேஹரிஹரன் கூறுகையில்.. மனித கடத்தலை தடுக்கும் வகையில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 38 மாவட்டங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு மன்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்குள் 6000 மாணவர்களுக்கு. விழிப்புணர்வு பயிற்சியை வழங்குவதோடு 2023 ஆம் ஆண்டிற்குள் 36 ஆயிரம் மாணவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சக்தியை திறம்பட மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறுகையில்.. மனித கடத்தல் ஒரு குற்றம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23 கூறுகிறது. மனித கடத்தல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த பிரச்சாரம் சென்றடைய வேண்டும் என்றார்.
வீதி நாடகப் பயிற்றுனர்கள் சாந்தகுமார், அபர்ணா கோபிநாத் ஆகியோர் கூறுகையில்..மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி முகாமில் மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். மாணவியர்களிடம் இருந்து நாங்களும் எங்களிடம் இருந்து மாணவியர்களும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.இம்முகாமில் பயிற்சி பெற்ற மாணவியர்கள் மூலம் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு மக்களை பரவலாக சென்றடையும் என்றனர்.