சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் – வெற்றி யார் பக்கம்?
நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரியம் கொண்டதாக இருக்கின்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கான தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 16 பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உண்டு என்றாலும், அவர்களில் 4,956 வழக்கறிஞர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் சங்கத் தலைவரும், பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர்.சி.பால் கனகராஜ் மற்றும் பலர் போட்டியிடுகின்றனர். செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றாலும் தலைவர் பதவிக்கான போட்டி தமிழக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்றது. சங்க விதிமுறைகளின்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது கட்டாயமாகும். ஆனால், தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் தகுதி வரைமுறைகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து, தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஜனவரி 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்ததா தலைவர் பதவி?
தமிழகத்தில் எத்தனையோ வழக்கறிஞர் சங்கங்கள் உண்டு என்றாலும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையேயான பாலமாக செயல்படுபவராகவும், வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பவராகவும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செயல்பட வேண்டும். அந்த வகையில் புதிய தலைவர் யார் என்பது சிறப்புக் கவனம் பெறும் விஷயமாக உள்ளது.
இலவசங்கள், துண்டு பிரசுரங்களுக்கு தடை
வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழக்கறிஞர்களை கவரும் வகையில் இலவசப் பொருட்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கோரும் வகையிலான துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வேட்பாளர்கள் வழக்கறிஞர்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வெற்றி யார் பக்கம்?
ஏற்கனவே குறிப்பிட்டபடி, சென்னை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பதவி முக்கியத்துவம் உடையது என்பதால் இதில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற கேள்வி உற்று நோக்கி கவனிக்கப்படுகிறது. குறிப்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு அரசியல் சார்பு இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அந்த வகையில், அரசியல் சார்பற்ற வேட்பாளரையே தலைவராக தேர்வு செய்ய உறுப்பினர்கள் விரும்புகின்றனர். அதிலும், தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் எந்தவித அரசியல் சார்பும் இல்லாதவர் என்பது அவருக்கான கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்த அனுபவம் கொண்டவர் என்பதுடன், பல ஆண்டுகளாக எந்த தலைவராலும் நிறைவேற்ற முடியாத வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டுறவு கேன்டீனை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தவர் என்ற பெயர் இவருக்கான பிளஸ் ஆக உள்ளது.
வரலாற்றில் இடம்பிடித்த தலைவர்களான சிங்காரவேலர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆர்.வெங்கட்ராமன் மற்றும் பல மாண்புமிகு நீதிபதிகள் உள்ளிட்டோர் வழக்கறிஞர்களாக இருந்த சமயத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொறுப்புகளில் இருந்துள்ளனர் என்ற நிலையில், புதிய நிர்வாகிகள் குறித்த தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது