சேலம் விவசாயிடம் துடிக்கும் மதுரை இளைஞரின் இதயம்
https://youtu.be/CJrT4BHa3hYhttps://youtu.be/CJrT4BHa3hY
15 சதவீத இதய செயல்பாடுடன் 18 மாதம் காத்திருந்த விவசாயிக்கு
ரேலா மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை
சென்னை, டிச.15–சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை மதுரை இளைஞரின் இதயத்தை சேலத்தைச் சேர்ந்த விவசாயிக்கு பொருத்தி உள்ளது. சேலத்தைச் சேர்ந்த 36 வயதான விவசாயி மோகன பெருமாள். இவர் விவசாயம் தவிர பகுதி நேர ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூளைச் சாவு அடைந்த மதுரையைச் சேர்ந்த இளைஞரின் இதயத்தை ரேலா மருத்துவமனை டாக்டர்கள் குழு பொருத்தி உள்ளது. இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நோயாளி பொருத்தமான இதயத்திற்காக சுமார் 18 மாதங்கள் காத்திருந்தார். பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து இதயம் கிடைத்த போதிலும் அது அவருக்கு பொருந்தவில்லை. இந்த நிலையில் அவருக்கு சரியாக பொருந்தும் வகையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மூளைச் சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து இதயம் கிடைத்தது. அதை ரேலா மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் குழு வெற்றிகரமாக பொருத்தி உள்ளது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை டாக்டர்கள் குழு கடந்த மாதம் 17–ந்தேதி மேற்கொண்டது. உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக அதை பெற்றுக் கொண்டவரும் அவரது குடும்பத்தினரும், ரேலா மருத்துவமனையும் இணைந்து ரேலா மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
விவசாயி மோகன பெருமாளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதய தசையின் விரிவாக்கத்தால் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டதோடு, அவருக்கு அடி வயிறு சார்ந்த பிரச்சினையும் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதிக மருத்துவ கட்டணம் காரணமாக அவரால் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் அவர் சென்னையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். இந்த நிலையில் ரேலா மருத்துவமனைக்கு வந்த அவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 மாதங்கள் காத்திருந்த அவருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 14–ந்தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாக அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் அவரது உறுப்புகளை தானம் அளிப்பது குறித்தும் அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் எடுத்து கூறினார்கள். அதை ஏற்றுக் கொண்ட அவரது பெற்றோர் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தனர். இது குறித்த தகவல் தமிழ்நாடு உறுப்புப் பதிவேட்டிற்கு அனுப்பப்பட்டது. முறையான பதிவு விதிகளுக்கு உட்பட்டு அந்த இதயம் ரேலா மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பிரேம் ஆனந்த் ஜான் தலைமையில் 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு மதுரைக்கு சென்று இதயத்தை பெற்று வந்தது. இந்த இதயம் பசுமை வழிச்சாலை மற்றும் சென்னை போக்குவரத்து சட்டம் ஒழுங்கு போலீசாரின் உதவியுடன் விமானம் மூலம் சென்னை ரேலா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இது குறித்து ரேலா மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன் கூறுகையில், நோயாளி மோகன பெருமாள் 8 ஆண்டுகளுக்கு மேலாக இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது இதயம் 15 சதவீதம் மட்டுமே செயல்படுவது தெரிய வந்தது. மேலும் அவர் உயிர் வாழ இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இது போன்று லட்சத்தில் 8 பேருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பவர்களின் விகிதமானது மிகக் குறைவாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் ஒரு ஆண்டுக்குள் மரணம் அடைகிறார்கள். 50 சதவீதம் பேர் 5 ஆண்டுகளுக்குள் இறந்து விடுகிறார்கள். இதற்கு அறுவை மாற்று சிகிச்சை ஒன்றே சிறந்த தீர்வாகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், தமிழக அரசின் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பல உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கத்தால் வழங்கப்படும் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், இருதயநோய் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமின்றி, ரேலா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாக் சயின்சஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவிற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சியாகும். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் மோகன பெருமாள் தற்போது நன்றாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து மோகன பெருமாளின் மனைவி கூறுகையில், ரேலா மருத்துவமனையின் டாக்டர்கள் எங்களுக்கு செய்த அனைத்திற்கும் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். டாக்டர்கள் மோகன் மற்றும் பிரேம் ஆகியோர் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தனர். அதன் காரணமாகத்தான் நாங்கள் இன்று உங்கள் முன் மகிழ்ச்சியாக நிற்கிறோம். இன்று, என் கணவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது இல்லாவிட்டால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியாது என்று கூறினார்.